search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் மசூதி தாக்குதலுக்கு ஜமாத் உல் அஹ்ரர் அமைப்பு பொறுப்பேற்றது: உயிரிழப்பு 36 ஆக அதிகரிப்பு
    X

    பாகிஸ்தான் மசூதி தாக்குதலுக்கு ஜமாத் உல் அஹ்ரர் அமைப்பு பொறுப்பேற்றது: உயிரிழப்பு 36 ஆக அதிகரிப்பு

    பாகிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதலுக்கு ஜமாத் உல் அஹ்ரர் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
    பெஷாவர்:

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான எல்லைப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் மொஹ்மான்ட் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட அம்பர் தாலுக்காவில் உள்ள மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் ‘ஜும்மா’ தொழுகைக்கு கூடியிருந்தனர்.

    பிற்பகல் 2 மணியளவில் வழிபாட்டுக்கு வந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15-க்கும் அதிகமானோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். படுகாயங்களுடன் சுமார் 40 பேர் அருகாமையில் உள்ள பஜாவுர், சர்சாடா மற்றும் பெஷாவர் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அவர்களில் சிலர் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்ததால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 குழந்தைகள் உள்பட 28 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தாக்குதலுக்கு திட்டமிட்ட நபர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பில் இருந்து பிரிந்த ஜமாத்-உல்-அஹ்ரர் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. 2009-ல் தங்கள் உறுப்பினர்கள் 13 பேர் மரணத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளது.
    Next Story
    ×