search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் 199 முறை போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது: ரஷ்யா
    X

    சிரியாவில் 199 முறை போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது: ரஷ்யா

    சிரியாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் இதுவரையில் 199 முறை மீறப்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
    மாஸ்கோ:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டில் உள்ள பல்வேறு போராளி குழுக்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.எஸ். ஆதிக்கம் உள்ள பகுதிகளில் ரஷ்யாவும் அமெரிக்க கூட்டுப்படைகளும் தாக்குதல் நடத்தத் தொடங்கின.

    கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட சுமார் 3 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் ஐ.நா.வின் தீவிர முயற்சியின் பலனாக சிரியாவில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் சில தினங்களுக்கு முன் நடைமுறைக்கு வந்தது.

    ஆனால், இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவும், கிளர்ச்சிக் குழுக்களும் 199 முறை மீறியிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

    ‘அமெரிக்காவும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் மிதவாத கிளர்ச்சிக் குழுக்களும், ஜெனீவா உடன்படிக்கைகளில் உள்ள எந்த ஒரு அம்சத்தையும் அமல்படுத்தவில்லை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தால், அனைத்து பொறுப்புகளும் அமெரிக்காவின் மீதுதான் விழும்’ என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி விக்டர் போஸ்னிகிர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
    Next Story
    ×