search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்சிகோ: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மகன் கடத்தல்
    X

    மெக்சிகோ: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மகன் கடத்தல்

    மெக்சிகோ நாட்டில் மிகவும் பிரபலமான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் குஸ்மேன் சாப்போவின் மகனை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மெக்சிகோ சிட்டி:

    உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் தரவரிசையில் ஒரு காலத்தில் இடம் பெற்றிருந்த குஸ்மேனுக்கு ‘எல் சாப்போ’ என்ற பட்டப்பெயரும் உண்டு. அமெரிக்கா முழுவதும் நடைபெறும் கொக்கைன், பிரவுன் ஷுகர், கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப்பொருள் கடத்தலையும், வியாபாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த குஸ்மேன், இந்த தொழிலின் முடிசூடா சக்கரவர்த்தியாக முன்னர் வலம் வந்தான்.

    மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கோஷ்டிகளுக்குள் ஏற்பட்ட தொழில் முறை மோதல்களிலும், இதுதொடர்பான கொலைகளிலும் இவனுக்கு தொடர்பு இருந்ததால் 1993-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஸ்மேன், கடந்த 2001-ம் ஆண்டு சிறையில் இருந்து தப்பி விட்டான். சிறை கைதிகளுக்கு சலவை செய்த துணிகளை கொண்டுவரும் ஒரு வண்டிக்குள் மறைந்து அவன் தப்பித்து விட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.



    பின்னர், போலீசாரிடம் பிடிபட்டு மெக்சிகோ மத்திய சிறைக்கு திரும்பிய ‘எல் சாப்போ’ குஸ்மேன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறைக்குள் இருந்து சுரங்கம் தோண்டி தப்பியோடி, கடந்த ஜனவரி மாதம் மீண்டும் போலீசாரிடம் பிடிபட்டான்.

    இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான ஜலிஸ்கோ நகரில் உள்ள பியூர்டோ வல்லார்ட்டா என்ற சொகுசு விடுதியில் இருந்த ஆறுபேரை நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.

    கடத்தப்பட்டவர்களில் மெக்சிகோ நாட்டில் மிகவும் பிரபலமான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் குஸ்மேன் சாப்போவின் மகனான ஆல்பிரடோ(29) என்பவரும் ஒருவர் என தற்போது தெரியவந்துள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு தொழில் போட்டியில் குஸ்மேனின் மற்றொரு மகனான எட்கர் என்பவரை கூலிப்படையினர் சுட்டுக் கொன்றது, நினைவிருக்கலாம்.
    Next Story
    ×