search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடி தொகுதி
    X
    வாணியம்பாடி தொகுதி

    வாணியம்பாடி தொகுதி கண்ணோட்டம்

    அதிமுக சார்பில் செந்தில் குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் என்.முகமது நயீம் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    அ.தி.மு.க. வேட்பாளராக ஜி. செந்தில்குமார் போட்டியிடுகிறார். தி.மு.க.வை பொருத்தவரை கடந்த 1996-ம் ஆண்டு வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டது. அதனையடுத்து வந்த அனைத்து தேர்தலிலும் கூட்டணி கட்சிக்கு வாணியம்பாடி தொகுதியை ஒதுக்கி வந்தது. இந்த முறையும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வேட்பாளராக என். முகமது நயீம் என்பவர் போட்டியிடுகிறார்.

    அதிமுக வேட்பாளர் ஜி. செந்தில்குமார் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 2,47,755
    2. அசையும் சொத்து- ரூ. 54,56,127
    3. அசையா சொத்து- ரூ. 1,27,50,000

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் என். முகமது நயீம் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 2,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 2,02,350
    3. அசையா சொத்து- ரூ. 80,50,000

    அ.ம.மு.க. கூட்டணி கட்சியான ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. அதன் வேட்பாளராக வக்கீல் அகமது போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக ஞானதாஸ் என்பவரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தேவேந்திரன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

    தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடத்தில் வாணியம்பாடி தொகுதி உள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியுடன் கூடிய காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஜவ்வாதுமலையின் சந்தன மரங்கள் மற்றும் சுவையான பிரியாணிக்கும் வாணியம்பாடி தொகுதி பெயர் பெற்றது.

    வாணியம்பாடி தொகுதியில் நகர பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையும், பேரூராட்சி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளும் முக்கிய தொழில் பகுதியாக உள்ளன. கிராம பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். அரசு சார்பில் தொழிற்சாலை எதுவும் இல்லை.

    வாணியம்பாடி தொகுதி

    இந்த தொகுதியில் வாணியம்பாடி நகரத்தில் 36 வார்டுகள், ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகள், உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம், நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூர், வெள்ளக்குட்டை, கொத்தகோட்டை, பெரியகுரும்பதெரு, விஜிலாபுரம், பெத்தவேப்பம்பட்டு, வள்ளிப்பட்டு, கோவிந்தாபுரம், வளையாம்பட்டு, நெக்னாமலை, தேவஸ்தானம், பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் ஆகிய 17 ஊராட்சிகள், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம், மரிமாணி குப்பம், மிட்டூர் பெருமாபட்டு, பள்ளவள்ளி, குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு, ஆண்டியப்பனூர் ஆகிய 8 ஊராட்சிகள், நாட்டறம் பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவராங்குப்பம், மல்லகுண்டா, சிக்கனாகுப்பம், அம்பலூர், கொடையாஞ்சி, தும்பேரி, வடக்குபட்டு, தெக்குபட்டு, எக்லாசபுரம், மல்லங்குப்பம், சங்கரபுரம், அழிஞ்சிகுப்பம் ஆகிய 17 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

    கோரை பாய் தயாரிப்பு

    வாணியம்பாடி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக தோல் பதனிடும் தொழில், தோல் பொருட்கள் தயாரிப்பு, தென்னை, கரும்பு உள்ளிட்ட வேளாண்மை, கோரை பாய் தயாரிப்பு, பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் உள்ளிட்டவை முக்கிய தொழிலாகும்.

    வாணியம்பாடி தொகுதியில் இஸ்லாமியர்களும், வன்னியர்களும் ஏறத்தாழ சமநிலையிலும், பட்டியல் இனமக்கள், முதலியார், நாயுடு, யாதவர், ஆதிதிராவிடர், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர்.வாணியம்பாடி தொகுதியில் 256 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப் பட்டுள்ளது. இதனால் தற்போது மொத்தம் 361 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சுரங்கப்பாதை

    வாணியம்பாடி நகரின் முக்கிய பிரச்சினையான நியூடவுன் சுரங்கப்பாதை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். பாலாற்றின் குறுக்கே சிறிய மற்றும் பெரிய தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர் மேம்படுத்தப்பட வேண்டும். வாணியம்பாடி தொகுதியில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரிகள் வேண்டும், நிதிகள் ஒதுக்கப்பட்டும் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றம், தொழிலாளர் நல மருத்துவமனை பணிகள் முடிக்கப்பட வில்லை. வாணியம்பாடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும்.

    தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளதால் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை மையம் உருவாக்கப்பட வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா பகுதியில் தொழிற்பேட்டை (சிப்காட்) தொடங்கப்பட வேண்டும். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் ரோட்டை ஒட்டியபடி 10 ஆண்டுகளுக்கு முன்பு கூடுதல் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த பஸ் நிலையம் திறக்கப்படவில்லை. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    வாணியம்பாடி தொகுதி

    மூடப்பட்டுள்ள சந்தன எண்ணெய் தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், வாணியம்பாடி பைபாஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பஸ் நிலையத்தை முறையாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமப்புற மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கிராமப்பகுதிகளில் விரிவாக்கம் செய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    1971 அப்துல் லத்தீப்- முஸ்லீம் லீக்
    1977 அப்துல் லத்தீப்- முஸ்லீம் லீக்
    1980 குலசேகரபாண்டியன்- அ.தி.மு.க.
    1984 அப்துல் மஜீத்- காங்கிரஸ்
    1991 இ.சம்பத்- காங்கிரஸ்
    1996 அப்துல் லத்தீப்- தேசிய லீக்
    2001 அப்துல் லத்தீப்- தேசிய லீக்
    2006 அப்துல்பாசித்-முஸ்லிம் லீக்
    2011 கோவி.சம்பத்குமார்- அ.தி.மு.க.
    2016 நிலோபர் கபில்- அ.தி.மு.க.
    Next Story
    ×