என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க... தமிழ்நாடு முழுவதும் 2-வது நாளாக இன்று சிறப்பு முகாம்
- சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
- ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று சிறப்பு முகாம்கள் நடந்தது.
சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் 6-ம் எண் படிவத்தை உறுதிமொழி படிவத்துடன் அளித்தனர்.
அதேபோல் முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்து தருவது போன்ற கோரிக்கைக்காகவும் விண்ணப்பங்களை ஆர்வமுடன் அளித்தனர்.
இந்நிலையில் இன்றும் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதையடுத்து ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.






