என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டி-கூடலூர் சாலையில் நிலச்சரிவு அபாயத்தால் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
    X

    ஊட்டி-கூடலூர் சாலையில் நிலச்சரிவு அபாயத்தால் வாகனங்களுக்கு கட்டுப்பாடு

    • அரசு பஸ்கள் பகல் நேரங்களில் மட்டுமே இயங்கும்.
    • பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியில் வருவதை தவிருங்கள்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது.

    தொடர் மழையால் 5 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சில இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்களில் விழுந்ததால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.

    தொடர்ந்து மழை மிரட்டி வரக்கூடிய சூழ்நிலையில், இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து மாவட்டத்தில் கனமழை பெய்கிறது.

    இந்த நிலையில் நேற்று ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தவளைமலை என்ற இடத்தில் பாறை உருண்டு சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் அதனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இருந்த போதிலும், தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால், பாறைகள் உருண்டு விழும் அபாயம் இருப்பதால் அந்த சாலையில் இரவு நேர போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் மழை காரணமாக தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், லேம்ஸ்ராக், அவலாஞ்சி, 9-வது மைல்கல் சூட்டிங் பாயிண்ட், ஊட்டி படகு இல்லம், ஊசிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் 2 நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்று மூடப்பட்டு கிடந்தது.

    இதுதொடர்பாக கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம்-தவளைமலை பகுதியில் பெரிய பாறைகள், கற்கள் சாலையில் விழும் அபாயம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த அறிவிப்பு வரும் வரை நடுவட்டம்-கூடலூர் சாலை வழியாக கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    அரசு பஸ்கள் பகல் நேரங்களில் மட்டுமே இயங்கும். சுற்றுலா வாகனங்கள் கூடலூர்-நடுவட்டம்-பைக்கார சாலைகள் வழியாக ஊட்டிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அவசர தேவைகளுக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும். பொதுமக்கள் அத்தியாவசியமின்றி வெளியில் வருவதை தவிருங்கள். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நீலகிரியில் கொட்டி தீர்த்த மழை காரணமாக சுற்றுலா தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்க தலைவர் பாரூக் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரமே சுற்றுலா தொழிலை நம்பி தான் உள்ளது. விடுதிகள், காட்டேஜ்கள், சுற்றுலாவை நம்பி சிறு, சிறு கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்கள் எண்ணற்ற தொழில் சுற்றுலாவை நம்பி நடக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இதன் மூலம் பயன் அடைந்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு ஏற்கனவே இ-பாஸ் உள்ளிட்ட நடைமுறையால் சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டிருந்தது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது. தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மழை கொட்டி வருகிறது. எந்த ஆண்டும் நீலகிரியில் மழைக்கு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதே கிடையாது. ஆனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மழையால் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. மழையாலும், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாலும் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து விட்டது. இதனால் சுற்றுலாவை மட்டுமே நம்பி உள்ள தொழில்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×