என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாளை முதல் வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி வைகை பூர்வீக பாசன பகுதி 3ன் கீழ் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு 2500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. மறுநாள் 2000, அடுத்த நாள் 1500, 1000, நேற்று 222 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்திற்காக மட்டும் 1721 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 1990 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.03 அடியாக உள்ளது. 5579 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
இந்த நிலையில் நாளை முதல் வைகை பூர்வீக பாசன பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 4 நாட்களுக்கு 2000 கனஅடியும், 5ம் நாள் 935 கனஅடியும் என மொத்தம் 5 நாட்களுக்கு 772 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வைகை பூர்வீக பாசன பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்ட கண்மாய்களுக்கு 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.85 அடியாக உள்ளது. 1515 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1822 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 6584 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 160 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. 7 கனஅடி நீர் வருகிற நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.






