என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

20 நாட்களாக 69 அடியில் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்
- வழக்கமாக 69 அடியில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்படும்.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.25 அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து கடந்த 5ம் தேதி 69 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வைகை கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
வழக்கமாக 69 அடியில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முழு கொள்ளளவில் நீர்மட்டத்தை நிலைநிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். தற்போது மழை குறைந்துள்ள நிலையில் 20 நாட்களாக 69 அடியிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.21 அடியாக உள்ளது. 591 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5626 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி கடல்போல் காட்சி அளிக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அணையின் நீர்பிடிப்பு பகுதி மலையடிவாரத்தில் அமைந்துள்ளதை கண்டு ரசித்தனர்.
மேலும் பூங்காவில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடினர். இங்கு பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.25 அடியாக உள்ளது. 876 கனஅடி நீர் வருகிறது. 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 5929 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு அணை பகுதியில் மட்டம் 0.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.






