என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
- பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
- சுருளி நீர்மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருேக உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
கடந்த ஜூன் 15ந் தேதி அணையின் நீர்மட்டம் 61.22 அடியாக இருந்த நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் முதல்போக சாகுபடிக்காக 900 கன அடி நீர் வீதம் திறக்கப்பட்டு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் அங்கிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
கடந்த ஜூன் 25ந் தேதி அணையின் நீர்மட்டம் 63.27 அடியாக இருந்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு ஆற்றின் வழியாக 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு 7 நாட்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 2ந் தேதி 59.02 அடியாக குறைந்தது. தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மீண்டும் 60 அடிக்கு மேல் உயர்ந்து இன்று காலை 60.81 அடியாக உள்ளது. அணைக்கு 1492 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 9069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3760 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது. 1107 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 2062 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5796 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு 6.2, தேக்கடி 6.6. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் மேகமலை பகுதியில் உள்ள அணைகளில் 70 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது. மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு ஆகிய அணைகளில் தண்ணீர் நிரம்பி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காட்சி அளிக்கிறது. இதனை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
நீர் வரத்து அதிகரிப்பால் இரவங்கலாறு அணையில் இருந்து கீழ்நோக்கி செல்லும் ராட்சத குழாய் மூலம் சுருளி நீர்மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.






