என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடைக்கானலில் கொட்டும் மழையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    கொடைக்கானலில் கொட்டும் மழையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • கொடைக்கானலில் நேற்று நாய் கண்காட்சி தொடங்கியது.
    • நாய் கண்காட்சியை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வாரவிடுமுறை தினமான இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கொடைக்கானலில் குவிந்தனர். நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்த போதும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நட்சத்திர ஏரியை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    முக்கிய சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக், மோயர்பாய்ண்ட், குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட், அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர்.

    தொடர்ந்து மழை பெய்த போதும், அதில் நனைந்தபடியும், குடைபிடித்த படியும் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர்.

    கொடைக்கானலில் நேற்று நாய் கண்காட்சி தொடங்கியது. இன்று 2-வது நாளாக நடைபெற்ற கண்காட்சியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான நாய்கள் கொண்டு வரப்பட்டது. ஜாக்ரசல் பேஷன்சி, அமெரிக்கன் ஸ்டாப்ட், டெரியர், கெய்ன் கார்ஷோ, பர்னிஷ், மவுண்டன், கார்ட்டன் ஹெட்டர், பாஷான் பிரிஸ், ஆஸ்திரேலியா செப்பேடு, அஸ்கர், பொம்மேரியன் மற்றும் தமிழ்நாட்டு நாய் வகைகளான சிப்பிபாறை, ராஜபாளையம், கன்னி உள்பட 40 வகையான நாய்கள் பங்கேற்றன.

    கண்காட்சியில் நாய்களின் குணாசதியங்கள், கட்டளைக்கு கட்டுப்படுதல், பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடத்தி வெற்றி பெறும் நாய்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நாய் கண்காட்சியை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை பகுதிகளுக்கும் சென்றனர். அங்கு எழும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை, சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். மேலும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டுகள், கேரட் உள்ளிட்ட காய்கறிகளையும் வாங்கிச் சென்றனர்.

    Next Story
    ×