என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது
    X

    திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

    • ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மடக்கி உடைமைகளை சோதனை செய்தனர்.
    • ஆரோக்கியதாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபஸ்டின், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் குழுவினர் 6-வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் கவுராவில் இருந்து சென்னை வழியாக வந்த கவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது அந்த ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு நபர் கருப்பு பையுடன் சுரங்கப்பாதை வழியாக வேக வேகமாக நடந்து சென்றார்.

    அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மடக்கி உடைமைகளை சோதனை செய்தனர். இதில் அவரது பையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ. 500 மற்றும் ரூ. 200 ரூபாய் நோட்டுகள் மொத்தம் ரூ.75 லட்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    விசாரணையில் அது ஹவாலா பணம் என தெரியவந்தது. மேலும் பணத்தை கொண்டு வந்தவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (வயது 49 ) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ரூ. 75 லட்சத்தையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வருமான வரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதா மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் பணம் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆரோக்கியதாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×