என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பில்லை- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
- அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
- தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல்.
குத்தாலம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது மாலை மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் ரோடு ஷோ மூலம் வாகனத்தில் நின்றவாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
50 மாத தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கொடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்கள் குறித்து கவலைப்படவில்லை. வீட்டு மக்களை பற்றிதான் கவலைப்படுகிறார். தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல். மன்னர் ஆட்சி இந்தியாவில் ஒழிக்கப்பட்டது. மீண்டும் மன்னர் ஆட்சி அமைப்பதற்கு மு.க.ஸ்டாலின் துடிக்கிறார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையான நெருக்கடி தரப் போகிறார்கள். வி.சி.க. ஆட்சியில் பங்கு கேட்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன. தேர்தல் நெருங்கும்போது சில கட்சிகள் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வரும். தி.மு.க. ஆட்சியல் நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பில்லை. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசனின் வாகனத்தை பறித்துள்ளனர். முதலமைச்சர் 'ஓரணியில் தமிழ்நாடு' மூலம் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேருங்கள் என வீடு, வீடாக செல்கிறார். மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டியில் மனு வாங்கினார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் பெட்டியில் உள்ள மனுக்களை எடுத்து தீர்வு காண்பேன் என தொவித்தனர். இப்படி கூறிவிட்டு எதற்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தொடங்கி மக்களை ஏமாற்றுகின்றனர்.
தி.மு.க. ஆட்சியில் மளிகை பொருட்கள் முதல் கட்டுமான பொருட்கள் வரை அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.






