என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கேரம் உலக சாம்பியன் கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு வழங்கப்பட வேண்டும் - பா. ரஞ்சித்!
    X

    "கேரம் உலக சாம்பியன் கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு வழங்கப்பட வேண்டும்" - பா. ரஞ்சித்!

    • மூன்று பிள்ளைகளையும் ஒற்றைப் பெற்றோராக இருந்து வளர்த்துவருகிறார் இந்திராணி
    • கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பினும், விடாது முயன்று இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்.

    கேரம் விளையாட்டில் உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற காசிமேடு பகுதியை சேர்ந்த கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும் என இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் தமிழ்நாடு அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா, 2025ஆம் ஆண்டிற்கான 7ஆவது உலகக் கோப்பை கேரம் போட்டியில் மகளிர் ஒற்றையர். இரட்டையர். அணி என மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கங்களை வென்று உலக சாம்பியனாகி, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    வடசென்னையை வாழ்விடமாகக் கொண்டுள்ள லோகநாதன் - இந்திராணி ஆகியோரின் மகள் கீர்த்தனா. குடும்பச் சூழல் காரணமாகப் பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டு, இளம்வயதிலேயே பணிக்குப் போகும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டவர். 2019 ஆம் ஆண்டு லோகநாதன் மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார். மூன்று பிள்ளைகளையும் ஒற்றைப் பெற்றோராக இருந்து வளர்த்துவருகிறார் இந்திராணி.

    இந்தப் பின்னணியில் இருந்து வந்த கீர்த்தனா, ஆறு வயதிலிருந்தே கேரம் விளையாட்டில் ஆர்வத்தோடும், அபாரத் திறமையோடும் விளங்கியதை அறிந்த அப்பகுதி மக்கள், அவரை மீண்டும் விளையாடச் சொல்லி ஊக்கப்படுத்தியதின் விளைவாக, விளையாட்டில் முழு கவனம் செலுத்தி 2025ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் வென்றிருக்கிறார்.

    அதன் பலனாய் உலகக் கோப்பை விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். 21 வயது நிரம்பிய கீர்த்தனா, சிறு வயதில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து, அதன்பின் கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு இன்று உலக சாம்பியனாகத் தன் பகுதி மக்களுக்குப் பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல், இந்த நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கிறார்.

    கீர்த்தனாவின் இந்தச் சாதனையைப் பாராட்டுவதும், அவரது திறமையையும் வாழ்நிலையையும் மேம்படுத்துவதும் அரசினுடைய கடமை. இது கீர்த்தனாவைப் போன்ற இன்னும் பல இளம் திறமையாளர்கள் வெளிவர உத்வேகமாகவும் அமையும் என்கிற காரணத்தினால், நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசிடம் முன்வைக்கிறது.

    உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சகோதரி கீர்த்தனாவுக்கு உரிய ஊக்கத்தொகை, அரசுப் பணி, வீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தமிழ்நாட்டில், கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பினும், விடாது முயன்று இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்.

    இதை ஊக்கப்படுத்த வேண்டியது இச்சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. இம்மூன்று கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படிநீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×