என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நில அபகரிப்பு தொடர்பாக ஜெயக்குமாருக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
- நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்-க்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த ஜெயக்குமார், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியும், அடியாட்களை வைத்து மிரட்டியும் தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதாக, காவல் துறையில் மகேஷ் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, விஸ்வநாதன் கொண்ட அமர்வு மனுவை விசாரித்தது. அப்போது "ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை" என தெரிவித்த நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.






