என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசாத பொருட்கள் திடீர் விலையேற்றம் - பக்தர்கள் அதிர்ச்சி
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மதுரை:
உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்து செல்கின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு, அதிரசம் ஆகியவற்றின் விலை கடந்த 2011-ம் வருடத்தில் இருந்து ரூ.10லிருந்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செய்யப்பட்ட இந்த விலையேற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 175 கிராம் சர்க்கரை பொங்கல், 150 கிராம் புளியோதரை, 140 கிராம் வடை, 50 கிராம் அப்பம், 40 கிராம் தேன்குழல் முறுக்கு, 60 கிராம் லட்டு இவை யாவும் தற்போது 15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 15 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்த பிரசாதங்கள் தற்போது 50 சதவீதம் விலை ஏற்றம் கண்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த விலையேற்றம் உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 8 கிராம் குங்குமம் 3 ரூபாய்க்கும், 40 கிராம் குங்குமம் 15 ரூபாய்க்கும், 100 கிராம் குங்குமம் 35 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவில் வளாகத்திற்குள் பொற்றாமரை குளம் பகுதியில் 2 பிரசாத கடைகளும், அம்மன் சன்னதி, முக்குறுணி விநாயகர் ஆலயம், கொடிமரம் அருகே என மொத்தம் 6 பிரசாத ஸ்டால்கள் உள்ளன. கோவிலுக்கு வெளியே கிழக்கு கோபுரம் அருகில் ஒரு பிரசாத ஸ்டால் என 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பக்தர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய இந்த பிரசாதங்களின் விலை ஏற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் பை 21 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அது மட்டும் ரூபாய் 15 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






