என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டியில் குவியும் பருவகால வெளிநாட்டு வெண் நாரைகள்- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    X

    ஊட்டியில் குவியும் பருவகால வெளிநாட்டு வெண் நாரைகள்- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    • ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வரும் நாரைகள், சுமார் 3-4 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்கும்.
    • ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் முகாமிட்டு உள்ள இந்த நாரைகள், நகரின் அதிகாலைநேரங்களை இன்னும் அழகாக மாற்றுகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியின் அடையாளமாக திகழும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தற்போது வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் முகாமிட்டு வருகின்றன.

    இந்த காட்சிகள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் மக்களின் காலை நேர ரம்மியத்துக்கும் ஒரு அபூர்வ காட்சியை வழங்குகிறது. ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் வெண்ணிற மலர்கள் போல பரவி நிற்கும் வெள்ளை நாரைகள், கண்களை ஈர்க்கும் சிவப்பு நிற கால்களுடன் உலா வருகின்றன. அந்த பகுதியில் இயற்கையாக உருவான சதுப்பு நிலங்களும், ஈர புல்வெளிகளும் அவைகளின் வாழ்வாதார முகாமாக மாறியுள்ளன.

    மேலும் கூட்டமாக இரை தேடும் நாரைகள் தங்களுக்கே உரிய ஒலிகளால் ஒன்றோடு ஒன்று உரையாடும் காட்சி, பார்வையாளர்களின் மனதை பெரிதும் கவர்ந்து வருகிறது.

    ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து வரும் இந்த நாரைகள் அனைத்தும் வெள்ளை நிற இனத்தை சேர்ந்தவையே.

    இமயமலை, விந்திய மலைத்தொடர் மற்றும் சத்பூரா மலைத்தொடர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவுக்கு பயணித்து, கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வந்தடைகின்றன.

    ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வரும் இந்த நாரைகள், சுமார் 3-4 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்கும். இந்த காலகட்டத்தில் அவை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. பின்னர் அவை மீண்டும் தங்கள் பழைய வாழிடங்களை நோக்கி பறந்து செல்கின்றன.

    ஊட்டி ரேஸ்கோர்ஸ் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 'கிக்கியூ' புல்வெளி பகுதிகளில் புழு-பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்களை உணவாக்கி கொள்ளும் இந்த நாரைகள், சதுப்பு நிலங்களில் மெதுவாக சுழன்று, தரையை உற்று நோக்கி உணவுத் தேடும் காட்சி, இயற்கையின் ஒழுங்கை உணர்த்துவதாக அமைந்து உள்ளது.

    "சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமா இந்த ஊட்டி சொந்தம்? நாங்களும் சுற்றுலாவாகத்தான் இங்கு வந்து தேனிலவு கொண்டாடுகிறோம்" என்று சொல்லாமல் சொல்லும் வெள்ளை நாரைகள், அதிகாலை நேரங்களை சினேகமாக்கும் இயற்கை நண்பர்களாக உள்ளன.

    நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் களைகட்டி இருக்கும். இந்த நிலையில் ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் முகாமிட்டு உள்ள இந்த நாரைகள், நகரின் அதிகாலைநேரங்களை இன்னும் அழகாக மாற்றுகின்றன.

    ஊட்டி சுற்றுலா பயணிகளின் கேமராவில் மட்டுமின்றி உள்ளூர் மக்களின் மனங்களிலும், இந்த பருவகால பறவைகளின் பரவச முகாமிடல் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன.

    Next Story
    ×