என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களை காணலாம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களால் பணிச்சுமை- வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
- 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- வேலைநிறுத்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 359 நபர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுகந்தி, நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் விக்னேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகா அலுவலகங்களில் புதிதாக துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்மாவட்டத் தலைவர் ஜான் பாஸ்டின் கூறுகையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறுகிய கால அவகாசத்தில் அதிகமாக நடத்தப்படுகிறது. குறிப்பாக வாரத்தில் 5 நாட்கள் நடத்தப்படுவதால் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்திற்கு 2 முகாம்கள் மட்டுமே நடத்த வேண்டும். இத்திட்டப்பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 359 நபர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.






