என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் 7-வது நாளாக கடலுக்கு செல்ல தடை:  வாழ்வாதாரம் பாதிப்பு
    X

    மண்டபம் தென்கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள படகுகளை காணலாம்.

    ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் 7-வது நாளாக கடலுக்கு செல்ல தடை: வாழ்வாதாரம் பாதிப்பு

    • ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று கடந்த ஒரு வாரமாக வீசி வருகிறது.
    • தடை காரணமாக சுமார் ரூ.5 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்து தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இவை வலுவடைந்து வருகிற 27-ந் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக கடற்பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 35-45 கிலோ மீட்டர் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று கடந்த ஒரு வாரமாக வீசி வருகிறது. வழக்கத்தை விட கடல் சீற்றத்துடன் காணப்ப டுகிறது. மோசமான வானிலை, புயல்சின்னம் காரணங்களால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 19-ந் தேதி முதல் மீன்வளத்துறை தடை விதித்தது.

    7-ம் நாளான இன்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக 800 விசை படகுகள், 300 நாட்டு படகுகள் ஆகியவை ராமேசுவரம், பாம்பன் துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தடை காரணமாக சுமார் ரூ.5 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் ராமேசுவரம், மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் தடையை மீறி கடலுக்கு சென்றதாக தெரிகிறது. அவர்களை கடலோர காவல் படையினர் கரைக்கு திரும்புமாறு எச்சரித்தனர்.

    Next Story
    ×