என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்
- கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத் தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.
- வாக்குரிமை அளிக்கப்பட்டால் தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக சொத்துகளை இழந்து தமிழ் மண்ணுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் குடியேறினர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலுள்ள 116 முகாம்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகள் இவர்கள் இங்கு வாழ்ந்தாலும் இந்திய மக்களை போல சுதந்திரமாக வாழ முடியாத சூழல் இன்றும் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின்போது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குரிமை அளிக்கப்பட்டால் தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள். ஆகவே இவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






