என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கனமழையில் இருந்து பயிர்களையும் மக்களையும் காக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
- டெல்டா மாவட்டப் பகுதிகளில் நெற்பயிர்கள் பெருமளவு சேதமடைந்தது.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த நிவாரண உதவிகள் போதுமானதல்ல என்பதை உணர்ந்து அதனை உயர்த்தி வழங்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடப்பு ஆண்டிற்கான பருவ மழைக்காலத்தில் மாநிலத்தில் ஆங்காங்கே மழை, கனமழை, அதி கனமழை பெய்ததால் பல்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கான காரணங்களில் ஒன்று முறையாக நீர்நிலைகளை பாதுகாக்க தவறியது தான் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
டெல்டா மாவட்டப் பகுதிகளில் நெற்பயிர்கள் பெருமளவு சேதமடைந்தது. சில இடங்களில் பாலங்கள் இடிந்து விட்டன. போக்குவரத்துக்கு பாதிப்பு. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
இது போன்ற ஒரு சூழல் ஏற்படக்கூடாது என நினைத்த நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி சில மாவட்டங்களில் மழையும், சில மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் அதி கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
எனவே தமிழக அரசு மீண்டும் மழையால் மாநிலத்தில் உள்ள விவசாயப்பயிர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருக்க முன்னேற்பாடான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழக அரசு ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த நிவாரண உதவிகள் போதுமானதல்ல என்பதை உணர்ந்து அதனை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






