என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளையின் உடல் உறுப்புகள் தானம்- 5 பேருக்கு பொருத்த நடவடிக்கை
    X

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளையின் உடல் உறுப்புகள் தானம்- 5 பேருக்கு பொருத்த நடவடிக்கை

    • மகேசின் சிறுநீரகம், கண்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளை தானம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 23). கபடி வீரரான இவருக்கும், குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் (16-ந்தேதி) மதியம் மகேஷ் காவல்கிணறு பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவர் மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்தார். மகேசின் சிறுநீரகம், கண்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளை தானம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதற்கான நடவடிக்கையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் ஈடுபட்டனர். இன்று காலையில் மகேசின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அவற்றை 5 பேருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்காக தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சுகள் மூலமாக அவற்றை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். மகேசன் ஒரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் காரைக்குடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் கல்லீரலும் திருச்சியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்கள் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மகேசின் உடல் உறுப்புகளுடன் ஆம்புலன்சுகள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து நாகர்கோவில் நகரில் போக்குவரத்தை சரி செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதற்காக நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஆம்புலன்சுகள் வந்தபோது மற்ற வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

    இதனால் உடல் உறுப்புகளை கொண்டு சென்ற ஆம்புலன்சுகள், எந்தவொரு நெரிசலிலும் சிக்காமல் நாகர்கோவில் நகரை சில நிமிடங்களில் கடந்து சென்றது. பின்பு சிறிது நேரத்தில் மகேசின் உடல், அவர்களது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    அவர்கள் கூறுகையில், "மகேஷ் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். அவரது உறுப்புகளை கொண்டு சிலர் உயிர் வாழ்வார்கள் என்ற நல்லெண்ணத்துடன் இந்த முடிவை எடுத்தோம். அதன் அடிப்படையில் அவரது கிட்னி, கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது" என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.

    Next Story
    ×