என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தீபத்தூண் அல்ல; கிரானைட் கல் தூண்தான் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர்!
    X

    'தீபத்தூண் அல்ல; கிரானைட் கல் தூண்தான்' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர்!

    • தாக்கல் செய்த மனுக்கள் கார்த்திகை தீபம் தொடர்புடையவை அல்ல
    • 3 நாட்களுக்கு முன் தனி நீதிபதி உத்தரவிட்டு, உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி?

    திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், மலைமீது உள்ள தூணில்தான் விளக்கேற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோன்று தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், எதிர்மனுதாரர்களுக்கு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலையில் விசாரணை நடைபெற்ற நிலையில், பிற்பகலும் தொடர்ந்தது.

    அப்போது அரசுத்தரப்பில், "மலையில் தேவஸ்தானமே விளக்கேற்ற வேண்டும். தனி நபர் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 73 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபமேற்றும் இடத்தை மாற்றுவது குறித்து கோயில் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டுமென ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 1970, 2014ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளும் தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தன. மேலும் 3 நாட்களுக்கு முன் தனி நீதிபதி உத்தரவிட்டு, உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி?" என வாதம் முன்வைக்கப்பட்டது.

    தொடர்ந்து கோயில் நிர்வாக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் கார்த்திகை தீபம் தொடர்புடையவை அல்ல" என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்புடையதுதானே என கேள்வி எழுப்பினர்.

    தொடர்ந்து மனுதாரர் குறிப்பிட்டுள்ள தூண் கோயிலுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு இரு உச்சிகள் உள்ளன. ஒன்றில் தர்கா, மற்றொன்றில் கோயில் அமைந்துள்ளது. அங்கு கிரானைட்டால் ஆன தூண்தான் உள்ளது. தீபத்தூண்தான் என நிரூபிக்க எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு (15.12.2025) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    Next Story
    ×