என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெருந்துறையில் வேலை பார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு 2 மாநிலங்களில் வாக்குரிமை! #ECI
    X

    பெருந்துறையில் வேலை பார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு 2 மாநிலங்களில் வாக்குரிமை! #ECI

    • இங்கு வாக்குரிமை பெற்றுள்ள பலரும் அவர்களது சொந்த மாநிலத்திலும் வாக்காளர்களாக உள்ளனர்.
    • குற்றச் செயலில் ஈடுபட்டு தப்பி வரும் நபர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட் ஆசிய அளவில் இரண்டாவது இடத்தை பெற்ற பிரமாண்டமான தொழில் வளாகமாக உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் இந்த தொழிற்சாலைகளின் தொழிலாளர் பற்றாக்குறையை பெரிதும் நிவர்த்தி செய்வது வடமாநில தொழிலாளர்களே. இங்கு மட்டுமின்றி தாலுகா முழுவதும் விவசாய பணிகள் உள்ளிட்ட பல்வேறு கூலி தொழில்களுக்கும் கூட வடமாநில தொழிலாளர்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர்.

    பெருந்துறை தாலுகாவில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக இவர்கள் பணிக்கம்பாளையம், காடபாளையம், கிருஷ்ணம்பாளையம், வாய்க்கால்மேடு, பள்ளக்காட்டூர், சீனாபுரம், திங்களூர், காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, விஜயமங்கலம், ஈங்கூர், சென்னிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக உள்ளனர்.

    கட்டட வேலை, விசைத்தறி கூடங்கள், சாய, சலவை ஆலைகள், ப்ளீச்சிங் பட்டறைகள், கார்மெண்ட்ஸ் நிறுவனங்களிலும் வட மாநிலத் தொழிலாளர்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர். இந்தத் தொழிலாளர்கள் பலரும் குடும்பத்துடன் இங்கேயே தங்கி அவர்கள் பிள்ளைகளையும் அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ் வழி கல்வி கற்க வைக்கின்றனர். இதன் காரணமாக பல வடமாநில தொழிலாளர்களும் இந்தப் பகுதியின் வாக்காளர்களாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

    இந்திய குடிமகன்கள் எங்கு வசித்தாலும் அந்த பகுதியில் வாக்காளராக இருப்பது அவர்களது உரிமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    இருப்பினும், பெருந்துறை தாலுகாவில் வசிக்கும் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் இருந்து பெருந்துறை சுற்றுப்பகுதிகளில் குடியிருக்கும் அந்த தொழிலாளர்கள் குறித்த முழுமையான தரவுகள் அரசுத் தரப்பில் இல்லை. தொழில் நிறுவனங்களும் புதிதாக பணிக்கு வரும் வட மாநில தொழிலாளர்களிடமிருந்து ஆதார் அட்டை மட்டுமே பெற்றுக் கொண்டு அவர்களை பணியில் சேர்க்கின்றனர்.

    இவர்களில் சிலர் அவர்களது சொந்த மாநிலங்களில் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்து அங்கிருந்து தப்பி வந்து இங்கே தொழில் நிறுவனங்களில் சைலன்டாக பணிபுரிபவர்களாக இருக்கின்றனர்.

    இன்னும் சிலர் வங்காள தேசத்திலிருந்து இந்திய- வங்கதேச எல்லை வழியாக ஊடுருவி மேற்கு வங்காளத்திற்குள் அகதிகளாக வந்து விடுகின்றனர். அங்குள்ள ஏஜென்சிகள் மூலம் போலியான விலாசத்தை கொடுத்து ஆதார் அட்டைகளை பெற்றுக்கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பணியாற்றுகின்றனர்.

    கடந்த ஆண்டில் மட்டும் பெருந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட வங்கதேச அகதிகள் போலியான ஆவணங்களை கொடுத்து இங்கே தங்கி இருந்ததை கண்டுபிடித்து, வழக்குத் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரத்தில் பெருந்துறையில் தங்கி இருந்ததாக நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதுதவிர பிழைப்பு தேடி புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தப் பகுதியின் வாக்காளர்களாக தங்களை சேர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியக் குடிமகன்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இங்கு வாக்குரிமை பெற்றுள்ள பலரும் அவர்களது சொந்த மாநிலத்திலும் வாக்காளர்களாக உள்ளனர்.

    இங்குள்ள அரசியல் கட்சிகள் இதனை அவ்வப்போது கண்காணித்து தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்து நடவடிக்கை எடுத்தாலும் அவர்களையும் தாண்டி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வாக்காளர்களாக பதிவு செய்து கொள்கின்றனர். இவ்வாறு வெளி மாநில தொழிலாளர்கள் வாக்காளர்களாக பதிவு செய்வதை இங்குள்ள அரசு அதிகாரிகள் சரியாக கண்காணித்து அவர்கள் இரட்டை வாக்குரிமை பெற்றவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    மேலும் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களின் அனைத்து தரவுகளையும் காவல்துறையினர் சேகரித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் மூலம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இரட்டை வாக்குரிமை பெறுவதை தடுக்கவும், குற்றச் செயலில் ஈடுபட்டு தப்பி வரும் நபர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

    எனவே இதற்கான நடவடிக்கையை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே பெருந்துறை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×