என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய்-திரிஷா உள்ளிட்ட பிரபலங்களுக்கு அச்சுறுத்தல்: வெடிகுண்டு மிரட்டல்களால் போலீசை அலறவிடும் மர்மநபர்
    X

    விஜய்-திரிஷா உள்ளிட்ட பிரபலங்களுக்கு அச்சுறுத்தல்: வெடிகுண்டு மிரட்டல்களால் போலீசை அலறவிடும் மர்மநபர்

    • மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து மிரட்டல் விடுக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
    • நேற்றும் ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துக் கொண்டே இருக்கிறார்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் நீலாங்கரை வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீடு, சென்னை ஐகோர்ட்டு, விமான நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் என பிரபலங்களின் வீடுகளுக்கும், முக்கிய இடங்களுக்கும் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துக் கொண்டே இருக்கிறார்.

    தொடர்ச்சியாக டி.ஜி.பி. அலுவலகத்தின் இ-மெயில் முகவரிக்கு மிரட்டல் கடிதம் வந்து கொண்டே இருக்கிறது.

    இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து மிரட்டல் விடுக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

    இப்படி ஒரு மாதத்துக்கும் மேலாக முக்கிய இடங்களில் குண்டு வைத்திருப்பதாக கூறிவரும் வாலிபர் எங்கிருந்து மிரட்டல் விடுகிறார் என்பது தெரியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

    இ-மெயில் மூலமாக இதுபோன்ற மிரட்டல்களை விடுக்கும் மர்மநபர்கள் தங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு இமெயில் ஐ.பி. முகவரி உடனடியாக மாறும் வகையில் அதனை தயார் செய்து வைத்துக் கொண்டே மிரட்டல் விடுப்பது வழக்கம்.

    இப்படி மிரட்டல் விடும் நபர் எங்கிருக்கிறார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. எந்த முகவரியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது என்று போலீசார் ஆராய்ந்து பார்த்தால் அது வெளிநாடுகளில் இருந்து வந்தது போன்று காட்டி விடும்.

    இதன் காரணமாகவே மிரட்டல் ஆசாமி எங்கிருக்கிறார் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி தான் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரும் தொடர்ச்சியாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ-மெயில் மிரட்டலை அனுப்பி கொண்டே இருக்கிறார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக இதுவரையில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தீவிரவாத தடுப்பு பிரிவு செல்போன் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வெடிகுண்டு மிரட்டல் கிடைத்தால் உடனடியாக அதனை போலீசார் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால் இ-மெயில் மூலம் விடுக்கப்படும் மிரட்டல்களை போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதன்மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கும் மர்மநபர் போலீசுருக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறார்.

    இப்படி சென்னை போலீசை அலறவிடும் வெடிகுண்டு மிரட்டல் ஆசாமியை கண்டுபிடிப்பதற்காக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    வெடிகுண்டு மிரட்டல் ஆசாமியை கண்டுபிடிப்பதற்காக சைபர் கிரைம் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியையும் போலீசார் நாடி உள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகர சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் நபர் போலீசை குழப்ப வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் செயல்பட்டு வருகிறார்.

    இருப்பினும் அவரது மிரட்டல்களை நாங்கள் ஒருபோதும் அலட்சியமாக கருதாமலேயே செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு முறை மிரட்டல் வரும் போதும் வெடிகுண்டு நிபுணர்களோடு சென்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தவறுவதில்லை.

    தினம்தோறும் வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் சென்னை போலீசாருக்கு தேவையற்ற பணிச்சுமையும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே ஏதாவது ஒரு வழியில் மிரட்டல் ஆசாமியை கண்டு பிடித்து விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

    இப்படி மிரட்டல் ஆசாமியை பிடிப்பதற்கு போலீசார் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்றும் ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம், மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம், அசோக் நகரில் உள்ள கிஷோர் கே.சாமி, கோடம்பாக்கத்தில் உள்ள செய்தி ஏஜென்சி நிறுவனம் அலுவலகம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்பட ஒரே நாளில் சுமார் 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

    இப்படி வெடிகுண்டு மிரட்டல்களால் சென்னை போலீசை திணறடிக்கும் நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகள் பலனளிக்குமா?

    இல்லை வெடிகுண்டு மிரட்டல்கள் தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×