என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இளையராஜா பாராட்டு விழாவை அகன்ற திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு- அமைச்சர் சாமிநாதன்
- இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழாவில் 3500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள்.
- நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னையின் சில பகுதிகளில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி கூட்ட அரங்கில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆண்டுதோறும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களைச் சேர்ந்த கலை பண்பாட்டு துறையில் பதிவு பெற்றுள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த 80 கிராமிய கலைஞர்களுக்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பில் விலையில்லா இசைக்கருவிகள், கலைப்பொருட்கள் வழங்கப்பட்டது.
நையாண்டி மேளக்கலைஞர்களுக்கு நாதஸ்வரம், சுருதி பெட்டி, சீவாளி மற்றும் தவில், கட்டைக் கூத்து, தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து ஆகிய கலைப்பிரிவை சேர்ந்த கலைஞர்களுக்கு கூத்து ஆடை உபகரணங்கள், மத்தளம், ஆர்மோனியம் போன்றவையும், வில்லு, கரகம், காவடி உள்ளிட்டவைகளையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விலையில்லாமல் இலவசமாக வழங்கினார்.
பின்னர் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள நலிவடைந்த கலைஞர்களை தேர்வு செய்து கலை பண்பாட்டு துறை மூலமாக 80 கலைஞர்களுக்கு தவில், நாதஸ்வரம் கிரீடம் உள்ளிட்டவைகளை வழங்கி உள்ளதாகவும் இந்த கருவிகள் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படும் என்று கூறிய அவர் கடைக்கோடியில் உள்ள கலைஞர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும் என்றார்.
நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழாவில் 3500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அளவில்தான் இருக்கைகள் அங்கு உள்ளது. நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னையின் சில பகுதிகளில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் வேலு எம்.எல்.ஏ., அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை) கே.மணிவாசன், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் (பொ) கவிதா ராமு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் தா.கிருஸ்துராஜ், சென்னை அரசு இசை கல்லூரி முதல்வர் கலைமாமணி ஆண்டான் கோயில் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டனர்.






