என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காலி பெருங்காய டப்பா போல ஆகிவிடுவார்: விஜய் வேசம் கலைந்து விட்டது - அமைச்சர் சேகர்பாபு
- ஸ்ரீரங்கம் கோவிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும்.
- முதலமைச்சர் புகழ்கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது.
சென்னை:
இந்தாண்டு ரூ.2.50 கோடி அரசு நிதியில் 2,000 பக்தர்கள் அறுபடைவீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். முதற்கட்டப் பயணத்தை இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கந்தக்கோட்டத்தில் நடந்த விழாவில் 199 பக்தர்களுக்கு பயண வழி பைகள் வழங்கி ஆன்மிகப் பஸ்சை தொடங்கி வைத்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அரண்டு போய் இருக்கின்றார். இந்த ஆட்சியின் மீது ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்ற வலையை வீசலாம் என்று நினைத்தவர்களுக்கு வலையை அறுத்து இது ஆன்மிக ஆட்சி என நிருபித்த பெருமை நமது முதலமைச்சரையே சாரும். கேரள அரசின் அழைப்பை ஏற்று உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்களின் பிம்பம் முழுவதும் இடிந்து தரைமட்டம் ஆகும் என்று பயந்து நயினார் நாகேந்திரன் அறிக்கை விட்டுள்ளார்.
கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் வாசன் முதலமைச்சர் சந்தித்து அழைப்பு விடுத்தபோது ஏற்கனவே திட்டமிட்ட பயணத் திட்டத்தில் மாறுதல் செய்ய இயலாத சூழ்நிலை இருப்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் நானும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் மாநாட்டில் பங்கேற்க உள்ளோம். நயினார் நாகேந்திரனின் பயத்திற்கான முடிவு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற சட்டமன்ற தொகுதியையே தி.மு.க. கைப்பற்றும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்செந்தூர் அர்ச்சகர்களிடம் ஒளிவு மறைவு இல்லாத நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றபோது அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி தீர்ப்பினை பெற்று வருகின்றோம். வெகு விரைவில் ஒழுங்குப்படுத்தி எவ்வித கையூட்டும் இல்லாமல் தரிசனம் செய்கின்ற சூழ்நிலையை நிச்சயம் துறை மேற்கொள்ளும். நடவடிக்கை எடுக்கும்.
ஸ்ரீரங்கம் கோவிலை மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோவிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும். மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறிய மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றாலும், அவர்களை அணுகி அனுமதி பெற்று செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை முதலமைச்சரின் அனுமதியை பெற்று துரை வைகோ சந்தித்து கூட்டணி தர்மத்தோடு விளக்கமாக எடுத்துக் கூற உள்ளேன்.
விஜய் 2 மாநாடுகளை முடித்திருக்கின்றார். நரியின் வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், ராஜா வேசம் கலைந்து போச்சு. டும் டும் டும், என்பதுபோல் அனைத்து தரப்பினரின் விமர்சனங்களையும் தாங்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் இன்னும் 2, 3 மாநாடுகள் நடத்தினாலே காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார் என்பதே எனது கருத்தாகும். அவரது உயரம் அவ்வளவுதான். முதலமைச்சர் புகழ்கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் சி.பழனி, கோ.செ.மங்கையர்க்கரசி, இணை ஆணையர்கள் ரேணுகா தேவி, முல்லை, உதவி ஆணை யர்கள் சிவக்குமார், பாரதிராஜா, கோவில் அறங்காவலர் குழு தலைவர் அசோக்குமார் மற்றும் அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






