என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 29 ஆயிரத்து 540 கனஅடியாக அதிகரிப்பு
- கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- தற்போது மேட்டூர் அணையில் 81.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது.
இதையடுத்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் அதிகளவில் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது.
இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தாலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்தது.
இதற்கிடையே தற்போது கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 29 ஆயிரத்து 540 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.48 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு,மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 81.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.






