என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை இந்தாண்டில் 7-வது முறையாக நிரம்பியது
- அணையில் கடல்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேட்டூர்:
கர்நாடகாவில் இந்தாண்டு பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக 1.25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆறு வெள்ளக்காடாக மாறியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது.
பின்னர் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்ததால் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. பின்னர் ஜூலை 20-ந்தேதி 3-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து ஜூலை மாதம் 25-ந் தேதி 4-வது முறையாக நிரம்பியது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி மேட்டூர் அணை 5-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து செப்டம்பர் 2-ந்தேதி 6-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நீர்வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்தது.
இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதேநேரம் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக மேட்டூர் அணை நடப்பாண்டில் 7-வது முறையாக நேற்று மதியம் 2 மணியளவில் நிரம்பியது. இதனால் அணையில் கடல்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 30ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது அணையில் இருந்து நீர்மின் நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக வினாடிக்கு 22ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 7700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணை கட்டி 92 ஆண்டுகள் ஆகிறது. இந்த 92 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை ஒரே ஆண்டில் அணையின் நீர்மட்டம் 7 முறை நிரம்பியது இந்த ஆண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மேட்டூர் அணை வரலாற்று சாதனை படைத்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.






