என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஐ.டி. ஊழியர் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
    X

    ஐ.டி. ஊழியர் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

    • உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என கவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அமைச்சர் கே.என் நேரு முன்னிலையில் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27).

    சென்னையில் ஐ.டி ஊழியராக பணிபுரிந்த இவர் கடந்த 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தம்பதிகளான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் (24) என்ற வாலிபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இந்நிலையில் அவரது பெற்றோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாகவும் அவர்களை கைது செய்யும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் எனவும் கவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து நேற்று அமைச்சர் கே.என் நேரு முன்னிலையில் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து இரவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று கனிமொழி எம்.பி நேரில் சென்று கவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு உடலை பெற்றுக் கொள்ள கோரிக்கை விடுத்தார். ஆனாலும் அவர்கள் உடலை வாங்க சம்மதம் தெரிவிக்கவில்லை.

    இதனிடைய 2 நாட்களாக சுர்ஜித்தின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை கைது செய்தனர். தொடர்ந்து இரவோடு இரவாக நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அவரை வருகிற 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து கைதான சரவணன் செல்போன் மற்றும் அவரது மகளின் செல்போன்களை போலீசார் கையகப்படுத்தியுள்ளனர். சைபர் கிரைம் போலீசார் மூலமாக அந்த செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலை சம்பவம் நடந்த அன்று சுர்ஜித் உடன் சரவணன் இருந்தாரா? சம்பவம் நடந்த நேரத்தில் அவர் சுர்ஜித்துக்கு போன் செய்தாரா? இதில் எந்த அளவுக்கு சரவணனுக்கு தொடர்பு இருக்கிறது? என்ற பல்வேறு விவரங்களை அறிவதற்காக அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்யும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக இருப்பதால் சிபிசிஐடி துணை போலீஸ் சூப்பிரண்டு தரத்திலான அதிகாரிகள் தான் இதன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படும் நிலை இருந்தது.

    இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவரோஜிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று பிற்பகலில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினார்.

    Next Story
    ×