என் மலர்
தமிழ்நாடு
ஃபெஞ்சல் கரையை கடக்க தாமதமாகுமா? 4 மாவட்டங்களில் 10 மணிக்கு மேல் மழையின் தீவிரம் அதிகரிக்கும்
- 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது.
- ஃபெஞ்சல் புயல் கடந்த சில மணி நேரங்களாக 7 கி.மீ, வேகத்தில் நகர்ந்து வருவதால் கரையை கடக்க தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
வங்கக்கடலில் கண்ணாமூச்சி காட்டி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகலில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில்,
புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம்/மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க துவங்கும்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மிக கனமழை முதல் அதி கனமழையும், குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
தரைக்காற்றின் வேகமும், மழைப்பொழிவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் படிப்படியாக அதிகரிக்கும். இன்று காலை 10 மணி முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.
சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் படிப்படியாக மழை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் கடந்த சில மணி நேரங்களாக 7 கி.மீ, வேகத்தில் நகர்ந்து வருவதால் கரையை கடக்க தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.