என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய் சூனியமாகி விடுவார்: திருமாவளவன்
    X

    அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய் சூனியமாகி விடுவார்: திருமாவளவன்

    • விஜய்யை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
    • அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

    சமையல் கியாஸ் தட்டுப்பாட்டை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை தெற்கு மாவட்டத்தில் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சைதாப்பேட்டையில் மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-

    இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் குடும்பங்கள் மட்டுமல்லாமல் ஓட்டல்கள் போன்ற தனியார் வர்த்தக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் மின் அடுப்பை நோக்கி செல்வதால் மின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவேதான் முதல்-அமைச்சர் ஓட்டல் மின் அடுப்பு பயன் படுத்துபவர்களுக்கு யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியம் அறிவித்துள்ளார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது.

    ஈரான் மீது நடக்கும் ஏவுகணை தாக்குதல் குறித்து பிரதமர் கருத்து ஏதும் சொல்லவில்லை. ஆனால் ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய போது அதற்கு பிரதமர் மோடி ஈரானை கண்டிக்கிறார்.

    அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை கண்டிக்காத பிரதமர், மக்கள் நலன் கருதி போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தாத பிரதமர், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரானை கண்டிக்கிறார். இது விந்தையாக இருக்கிறது.

    பிரதமர் கையாளும் இந்த வெளியுறவு கொள்கை இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கும், மக்கள் நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை. உலகப் போர் ஏற்படாத வகையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டம் மூலம் கோரிக்கை வைத்து உள்ளோம். மேலும் இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவா் பேசினார்.

    பின்னர் அவரிடம் நாட்டில் மற்ற மாநிலங்களில் இந்த பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் வேண்டும் என்று திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் பீதியை பரப்புகிறார்கள் என்று அண்ணாமலை கூறியது பற்றி கேட்டதற்கு,

    இந்த பதட்டம் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் இருக்கிறது. அப்படி என்றால் இந்தியா மற்றும் உலக நாடுகளின் நிலையை அண்ணாமலை அறிந்திருக்கவில்லை. இதனால் அரசியல் மற்றும் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை பற்றி அவருக்கு தெரிய வில்லை என்றுதான் தோன்றுகிறது.

    அண்ணாமலைதான் அரசியல் செய்கிறார். இது ஒன்றும் தேர்தலுக்கான போராட்டம் இல்லை. மக்களுக்கான போராட்டம். இது உலக நாடுகள் இடையே அமைதி கோரும் போராட்டம்.

    தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. ஆனால் அ.தி.மு.க. பாஜக இன்னும் பேச்சுவார்த்தையையே தொடங்கவில்லை. அ.தி.மு.க. கூட்டணி அமைக்கவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்களை இழுக்க முயற்சி செய்து தே.மு.தி.க. வை இழந்திருக்கிறார்கள்.

    விஜய்யை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

    விஜய் அந்த அழுத்தத்துக்கு அடிபணியமாட்டார். அடி பணிந்தால் அவரின் அரசியல் எதிர்காலம் சூனியம் ஆகிவிடும். அது அவருக்கும் தெரியும். பிற மாநிலங்களில் பா.ஜ.க. எப்படி எதிர்க்கட்சிகளை நயவஞ்சகமாக வளைத்து போடுகிறார்களோ, அதே யுக்திகளை தமிழகத்திலும் முயற்சிக்கிறார்கள். நண்பர் விஜய் அதற்கு இணங்கமாட்டார். தன்னுடைய எதிர்காலத்தை அவரே சூனியம் ஆக்கிக் கொள்ள மாட்டார் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×