என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சந்தேக புயலால் பிரிந்த குடும்பம்: மனைவியை நடுநோட்டில் கொலை செய்த கல்நெஞ்சு கணவன்
- இத்தனை ஆம்பளைங்க நிற்கிறீங்க... யாராவது போய் தடுங்க... என்று ஒரு பெண் கதறும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
- பொதுமக்களில் யாராவது ஒருவர் துணிச்சலுடன் சென்று பாரதியை தடுத்து இருந்தால் பரிதாபமாக ஒரு உயிர் போய் இருக்காது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி(வயது27). பெயிண்டர். இவருடைய மனைவி சுவேதா(26). தனியார் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாரதியும், சுவேதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிரேஷ்(9), கேப்ரியல்(7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகளுடன் அழகாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சந்தேக புயல் அடிக்க தொடங்கியது.
சுவேதாவின் நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையடுத்து சுவேதா, ஏ.பி.டி. ரோட்டில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை தனது குழந்தைகளை அருகே உள்ள பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வேலைக்கு புறப்பட்டார்.
பழனியப்பன் வீதியில் சுவேதா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாரதி அவரை வழிமறித்து, தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சுவேதா மறுக்கவே அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
சுவேதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் பாரதி விடாமல் பின்தொடர்ந்து சென்று பாரதியுடன் நடுரோட்டில் அவருடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பாரதி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவை குத்த முயன்றார். இதனால் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது பாரதி அருகே வந்தால் கத்தியால் குத்தி விடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன மக்கள் யாரும் அருகே செல்லாமல் உடனடியாக பொள்ளாச்சி கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் ஆத்திரத்தில் இருந்த பாரதி தான் கையில் வைத்திருந்த கத்தியால் சுவேதாவின் வயிறு உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாத சுவேதா ரத்த வெள்ளத்தில் சரிந்து, அப்படியே நடுரோட்டில் விழுந்து உயிருக்கு போராடினார். ஆனாலும் ஆத்திரம் தீராத பாரதி, சுவேதாவை தரதரவென இழுத்து அருகே உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தள்ளி கழுத்தை நெரித்தார். இதில் சிறிது நேரத்தில் சுவேதா உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடலை எடுத்து சாலையில் போட்டு விட்டு அதன் முன்பு அமர்ந்திருந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் பாரதியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொலை செய்ததாக பாரதி கூறினார். போலீசார் சுவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக பாரதியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே பாரதி நடுரோட்டில் சுவேதாவை குத்தி கொலை செய்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பார்ப்போருக்கு அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், கத்தியால் குத்தப்பட்ட சுவேதா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அப்போது ஆத்திரம் தீராத பாரதி சுவேதாவை தர, தரவென இழுத்து அருகே உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தள்ளினார்.
சாக்கடை கால்வாய்க்குள் தள்ளி விட்டு, அவரது கழுத்தில், கால் மற்றும் கையை வைத்து நெரித்தபடி சாவு.. சாவு... என்று சொல்லியபடியே கொடூரமாக கொலை செய்தார். இதில் சுவேதா துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போகிறார். சுவேதா இறந்ததை உறுதி செய்த பாரதி, நீ செத்தியா, செத்தியா என சத்தம் போட்டபடி, அவரது உடலை சாக்கடை கால்வாயில் இருந்து தூக்கி வெளியில் போட்டு விட்டு, அதன் முன்பு அமர்ந்து அவரது உடலை பார்த்தபடி இருக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
மேலும் இத்தனை ஆம்பளைங்க நிற்கிறீங்க... யாராவது போய் தடுங்க... என்று ஒரு பெண் கதறும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. பொதுமக்களில் யாராவது ஒருவர் துணிச்சலுடன் சென்று பாரதியை தடுத்து இருந்தால் பரிதாபமாக ஒரு உயிர் போய் இருக்காது. தற்போது தாயை இழந்து அவரது 2 குழந்தைகள் தவிக்கின்றன.






