என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது
- அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
இந்த நீர்வரத்து இன்றைய நிலவரப்படி 28 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.






