என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று நீர்வரத்தானது வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்தது.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் 10-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.