என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
- காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
- சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் கரையோரங்களில் குளிக்க இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கடந்த 18-ந்தேதி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 4 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் கரையோரங்களில் குளிக்க இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.






