என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக சரிவு - அருவியில் குளிக்க அனுமதி
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக சரிவு - அருவியில் குளிக்க அனுமதி

    • கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், கர்நாடக அணைகளான கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் முழுமையாக நிரம்பியதால், அணையின் பாதுகாப்பு கருதி, 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மெயின் அருவி ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், அருவியில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் பரிசல் இயக்க மட்டும் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து நேற்று ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 16ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி தொடர்ந்து நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றிலும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். அதே சமயம், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்கும்மாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×