என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விடுமுறை தினத்தையொட்டி அருவிகளுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
- கடந்த சில நாட்களாக மேகமலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.
- நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கேரள மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பல்வேறு அருவிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகத்தில் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேகமலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை முன்னிட்டு காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்திருந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து மேகமலை வனத்துறையினர் அருவியில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடும்பாறை போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மேலும் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கேரளா செல்வதற்கு முக்கிய வழித்தடம் என்பதால் அருவிகளில் குளித்துவிட்டு பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.






