என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
- நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்து எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
- வெள்ளத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இன்று கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.
நேற்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும்.
இதுன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆறு செல்லும் இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






