என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிவகங்கை: சட்டவிரோத குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் - அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சம்பந்தப்பட்ட குவாரி விதிமீறல் குறித்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்காந்தி மதிநாதன் ஐகோர்ட் மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சிவகங்கை மாவட்டம் மல்லான் கோட்டை கிராமத்தில் "தி மெகா புளூ மெட்டல் ஸ்டோன் கிரஷர்" என்னும் பெயரில் கல்குவாரி செயல்பட்டு வந்தது.
அந்த குவாரியில் ஏராளமானோர் தினக்கூலிகளாக பணியாற்றி வந்தனர். பெரிய பாறைகளை வெடி வைத்து தகர்த்து எம்சாண்ட் தயாரித்து இரவு நேரத்திலும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த மே மாதம் 20-ந்தேதி காலை கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக எஸ்.எஸ். கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. மாவட்ட கலெக்டர், இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி மாவட்ட கலெக்டர் சட்ட விரோத குவாரியைத் தடுக்க சிறப்பு குழுவை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆகவே 6 நபர்களின் இறப்பிற்கு காரணமான கல் குவாரி விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை கைது செய்யவும் இல்லை. மேலும் கல்குவாரிக்கு குத்தகை காலம் முடிந்து விட்டது. ஆனால் முடிந்து விட்ட குத்தகையை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ரத்து செய்வதாகவும் அறிவித்தார். இதெல்லாம் கேலிக்கூத்தான விஷயமாக உள்ளது.
எனவே சிவகங்கை மாவட்ட கலெக்டர் மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்க சிறப்பு குழுவை அமைக்கவும், மல்லான்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிங்கம்புணரி தாசில்தார், சிவகங்கை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர், எஸ்.எஸ். கோட்டை போலீஸ் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிணாய் காஸ், காலாவதியான குவாரியில் ஆறு பேர் நசுங்கி உயிரிழந்துள்ளனர். முறையாக கமிட்டி அமைத்து கண்காணிக்காததே விபத்துக்கு காரணம். எனவே குவாரி உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட குவாரி விதிமீறல் குறித்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்பொழுது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.






