என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2 ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்: 250 மாணவ, மாணவிகளிடம் விசாரணை
    X

    2 ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்: 250 மாணவ, மாணவிகளிடம் விசாரணை

    • 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
    • வீடியோவில் இருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும்.

    கிணத்துக்கடவு:

    3 பெண்கள் முகத்தை துணியால் மூடியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தாங்கள் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருவதாவும், அங்கு பணியாற்றும் 2 ஆசிரியர்கள் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், மாணவிகளுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும்போது தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும், இதுகுறித்து யாரிடம் சொல்வது என தெரிவதில்லை.

    இதில் இருந்து மாணவிகளை காப்பாற்ற வேண்டும் என்றும், அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசியிருந்தனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இதையடுத்து போலீஸ் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூர் டி.எஸ்.பி சிவக்குமார், பேரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, கருமத்தம்பட்டி, பெரிய நாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்தனர்.

    அங்கு 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையின்போது, வீடியோவில் வெளியிட்டுள்ள ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள். மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார்களா? என விசாரணை நடத்தினர்.

    ஆனால் அதுபோல் ஆசிரியர்கள் நடந்து கொள்வதில்லை. பாலியல் சீண்டல் எதுவும் நடக்கவில்லை என்று கூறினார்.

    போலீஸ் விசாரணையை தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்பக்க நுழைவு வாயில் மூடப்பட்டது. வெளி நபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    வழக்கமாக மாலை 4.10 மணிக்கு பள்ளி விடப்பட்டு விடும். ஆனால் நேற்று போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்றதால் 4.10 மணிக்கு பள்ளிக்கூடம் விடப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.

    அவர்கள் பள்ளிக்குள் போலீஸ் வாகனம் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிக்குள் என்ன நடக்கிறதோ என்ற அச்சத்தில் பள்ளி கேட் முன்பு காத்திருந்தனர். விசாரணை முடிந்து மாணவ, மாணவிகள் 5.30 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அவர் இன்று பேரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    இது தொடர்பாக 9, 10, 11, 12-ம் வகுப்புகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் மாணவ, மாணவிகள் யாரும் பாலியல் சீண்டலால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது வீடியோவில் வெளியாகி உள்ள 3 மாணவிகளில் ஒருவர் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவி என்பதும், மற்ற 2 பேர் தற்போது இந்த பள்ளியில் படிப்பதும் தெரியவந்தது.

    வீடியோவில் இருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும். இந்த சம்பவம் தொடர்பாக 2 வீடியோ, ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. இதில் மாணவியின் தாயார் மாணவிகளிடம் கேள்வி கேட்பதும் அதற்கு அவர்கள் பதில் கூறுவது போல் ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த வீடியோவை வெளியிட்ட பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரிடம் இன்று விசாரணை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×