என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம்; 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்!
- நீதிபதிகள் அரசியலமைப்பிற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், "கட்சிசார்ந்த அரசியல் அழுத்தங்கள் அல்லது கருத்தியல் மிரட்டல்களுக்கு" அல்ல
- எம்.பி.க்கள் மேற்கோள் காட்டிய காரணங்கள் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவை போதுமானவை அல்ல
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு, 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பல உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட முன்னாள் நீதிபதிகள் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தீர்ப்பின் பேரில் அவரை பதவி நீக்கம் செய்யும் முயற்சி "நமது ஜனநாயகத்தின் வேரையும், நீதித்துறையின் சுதந்திரத்தையும் வெட்டிவிடும்" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், எம்.பி.க்கள் மேற்கோள் காட்டிய காரணங்கள் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவை போதுமானவை அல்ல எனவும், இது "கொள்கை ரீதியான, நியாயமான விமர்சனம் அல்ல" என்றும் தெரிவித்துள்ளனர். இம்பீச்மெண்ட் நடைமுறையின் நோக்கம் நீதித்துறை நேர்மையை நிலைநிறுத்துவதாகும். அதை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தக்கூடாது. இன்று, ஒரு நீதிபதியாக இருக்கலாம்; நாளை, அது ஒட்டுமொத்த நிறுவனமாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் நிலைப்பாட்டை கடந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை மற்றும் குடிமக்கள் அனைவரும் "இந்த நடவடிக்கையை அதன் தொடக்கத்திலேயே முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் அரசியலமைப்பிற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், "கட்சிசார்ந்த அரசியல் அழுத்தங்கள் அல்லது கருத்தியல் மிரட்டல்களுக்கு" அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.






