என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் மரபணு திருத்தப்பட்ட புதிய நெல் விதைக்கு அரசு தடை விதிக்க வேண்டும்- பி.ஆர். பாண்டியன்
- மரபணு திருத்தப்பட்ட 2 புதிய நெல் ரகங்களை அறிமுகம் செய்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
- திருவாரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தை வருகிற 3-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
தஞ்சையில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், இயற்கை விவசாயி சித்தர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது :-
மரபணு திருத்தப்பட்ட புதிய நெல் விதைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது அவசர கதியில், மரபணு திருத்தப்பட்ட 2 புதிய நெல் ரகங்களை அறிமுகம் செய்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
மேலும் மரபணு திருத்தப்பட்ட விதைகளின் ஆய்வுக்களமாக காவிரி டெல்டா மாவட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் மரபணு திருத்தப்பட்ட விதைக்கு தடை உள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. அப்படி இருக்கும் வேளையில் மரபணு திருத்தப்பட்ட விதைக்கு அனுமதி அளித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விதையின் சாதக, பாதகங்கள் என்ன?
இவற்றால் தீமைகள் ஏற்படுமா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய தமிழக அரசு சிறப்பு வேளாண் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். எனவே தமிழகத்தில் மரபணு திருத்த நெல் புதிய விதை விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது.
இது தவிர வேளாண் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள், வாழை, நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தை வருகிற 3-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






