என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொழில் துறையை காக்க மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- சிறு, குறு நிறுவனங்களுக்கு 500 யூனிட்டு வரை மின் கட்டண உயர்வு இல்லை என்று கூறப்பட்டுள்ளது
- தொழில் துறையை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது மின் கட்டணம் உயர்வு என்பது தொழில்துறையை அரசே நசுக்குவதாக உள்ளது.
வீட்டு உபயோக மின் பயன்பாடு சாதாரணமாக நடுத்தர குடும்பத்தினருக்கு மாதம் 250 யூனிட்டு என்றாலே இரண்டு மாதத்திற்கு 500 யூனிட்டுக்கு மேல் வந்துவிடும். ஆனால் சிறு, குறு நிறுவனங்களுக்கு 500 யூனிட்டு வரை மின் கட்டண உயர்வு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மாதாந்திர மின் பயன்பாடு குறைந்தது மாதத்திற்கே 1000 யூனிட்டுக்கு மேல் வரும் நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. தொழில்கள், வணிக நிறுவனங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும்.
இந்த மின் கட்டண உயர்வின் சுழற்சி இறுதியில் மக்களின் தலையில் தான் சுமை ஏறும் என்பது நிச்சயம். ஆகவே தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும், தொழில் துறையை காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






