என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தண்டவாளத்தில் இருந்து விலகிநின்ற சரக்கு ரெயில் - திருவாரூரில் பரபரப்பு
- ரெயிலின் என்ஜின் பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி உள்ளது.
- சறுக்கி கொண்டு சென்ற சரக்கு ரெயில் தானாகவே நின்றுள்ளது.
திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம், காரைக்கால் வரை அகல ரெயில் பாதை பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக அவ்வப்போது திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஜல்லி கற்கள் சரக்கு ரெயில் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
அதேபோல், இன்று (திங்கட்கிழமை) காலை ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டுள்ளது. 12 பெட்டிகள் கொண்ட இந்த சரக்கு ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரெயிலின் என்ஜின் பெட்டியானது தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி உள்ளது. இதனையடுத்து சிறிது தூரம் ஜல்லி கற்களில் சறுக்கி கொண்டு சென்ற சரக்கு ரெயில் தானாகவே நின்றுள்ளது.
பின்னர், ரெயில் டிரைவர் கொடுத்த தகவலில் அடிப்படையில் திருவாரூர் ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, ரெயிலின் சக்கரம் கீழே இறங்கி கிடப்பதை பார்வையிட்டனர். பின்னர், என்ஜின் பெட்டியை தவிர்த்து மீதமுள்ள பெட்டிகளை மாற்று என்ஜின் மூலம் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால் மற்ற ரெயில் போக்குவரத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
தொடர்ந்து, அந்த என்ஜின் பெட்டியை கிரேன் மூலம் அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டு, திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சரக்கு ரெயில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.






