என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
    X

    மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

    • கடந்த சில நாட்களாகவே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.
    • மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைபொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி, பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்களம், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

    கடமலைக்குண்டு சுற்று வட்டார பகுதிகளிலும் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து அய்யனார்புரம், பாலூத்து, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக அய்யனார்புரம் பகுதியிலுள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கண்டமனூர்-வருசநாடு சாலையின் குறுக்கே பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரை வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.

    இதே போல சாலையில் ஆங்காங்கே மழை நீர் குளம் போல தேங்கியது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக கிராமங்களில் வெப்பம் தணிந்து குளுமையான சூழ்நிலை உருவானது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இன்றும் மழை பொழிவு இருக்கும் என பொதுமக்கள், விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.

    கனமழை காரணமாக மேகமலை அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்ததால் அவர்களை வனத்துறையினர் உடனடியாக வெளியேற்றினர்.

    இன்றும் அருவியில் அதிக அளவு நீர் ஆர்ப்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல் கும்பக்கரை, சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு சென்ற போதிலும் அதில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×