என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் தட்டு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டம்
- மாவட்டங்களுக்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாற்று நீர் தங்களுக்கு கிடைக்கவில்லை.
- போடி தாலுகா போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
முல்லை பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 5 மாவட்டங்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் முதல் போடி வரை 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் வகையில் முல்லை பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
18ம் கால்வாய் தண்ணீர் கடந்த 3 ஆண்டுகளாக தேவாரம் வரை மட்டுமே வருவதாகவும், இதனால் சங்கராபுரம் முதல் போடி வரை உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதற்காக பலமுறை போராட்டங்கள் நடத்தினார். மேலும் சங்கராபுரம் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
ஆனால் இதற்கு போடி போலீசார் அனுமதி மறுத்து தடை விதித்தனர்.
இந்த நிலையில் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சாலையில் தட்டு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 மாவட்டங்களுக்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாற்று நீர் தங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே 18ம் கால்வாயை சீரமைத்து போடி கடைமடை வரை தண்ணீர் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் சங்கராபுரத்தை சேர்ந்த அகில இந்திய மக்கள் பாதுகாப்பு உதவிக்கரம் அமைப்பை சேர்ந்த ராஜசேகரன், பொட்டிபுரம் விவசாயிகள் சங்க சிவக்குமார், சிலமரத்துப்பட்டி 18ம் கால்வாய் உயர்திட்ட போராட்டக் குழுவை சேர்ந்த வாசகர் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். போடி தாலுகா போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.






