என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போதைப் பொருளை ஸ்டாலின் கட்டுப்படுத்தி விட்டாராம்… உண்மையா மக்களே..? - இபிஎஸ் கேள்வி
    X

    போதைப் பொருளை ஸ்டாலின் கட்டுப்படுத்தி விட்டாராம்… உண்மையா மக்களே..? - இபிஎஸ் கேள்வி

    • அதிமுக அழுத்தம் கொடுத்த காரணத்தால், 28 மாதம் கழித்துத் தான் உரிமைத் தொகை கொடுத்தார்கள்
    • சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டது. போதை பொருட்கள் தாராளமாகக் கிடைக்கிறது.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார் . முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர் குமார் ஆகியோருடன் திருவெறும்பூர், தஞ்சை பிரதான சாலை பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் எழுச்சியுரையாற்றினார்.

    அப்போது பேசிய இபிஎஸ் , "திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதம் முடிந்துவிட்டது. இதில் நாட்டு மக்களுக்கு பெரிய நன்மைகள் எதுவுமில்லை. 2021 தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள் அறிவித்தனர். 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் திமுகவினர் 98% நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் சொல்லி வருகிறார்கள். கவர்ச்சிகரமாகப் பேசி நிறைவேற்ற முடியாததை அறிவித்து, கொல்லைப்புறமாக அட்சியை பிடித்தது திமுக.

    இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி, அரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி, கடலெண்ணை, நல்லெண்ணை என அனைத்து விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. கட்டுப்படுத்த அரசுக்குத் திறமையில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில், எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.

    சமீபத்தில் அமைச்சர் நேரு பேசியபோது, எம்ஜிஆருக்குத்தான் பெண்களிடத்தில் அதிக செல்வாக்கு இருந்தது, இப்போது ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று சொன்னார். எம்ஜிஆருக்கு இணை வைத்து எவரும் பேசமுடியாது. அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால், வேறு வழியின்றி, 28 மாதம் கழித்துத் தான் உரிமைத் தொகை கொடுத்தார்கள். இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு விதிகளைத் தளர்த்தி உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார். பெண்களின் கஷ்டங்களைப் பார்த்து கொடுக்கவில்லை, அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் ஓட்டுக்காகக் கொடுக்கிறார். இதை முன்பே கொடுத்திருந்தால் என்ன? 52 மாதம் உரிமைத் தொகை இழந்துவிட்டார்களே…?

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் இருக்கிறது, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை இரண்டே மாதத்தில் நிறைவேற்றினார்கள். தமிழ்நாட்டில் அப்படியல்ல, ஓட்டுக்களைப் பெறுவதற்கு அழகாகப் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் அந்தர்பல்டி அடிப்பார்கள்.

    திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. திமுக தோல்வியடைவது உறுதி, அந்த பயத்தில் தான் விதியைத் தளர்த்தி கொடுக்கிறார்.

    சட்டம் ஒழுங்கு டிஜிபி 30ம் தேதி ஓய்வுபெறுகிறார். 3 மாதத்துக்கு முன்பாகவே பட்டியல் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும். அவர்கள் மூவரை பரிந்துரைப்பார்கள். அவர்களில் ஒருவரை தேர்வுசெய்வார்கள். இதில் என்ன தாமதம், உள்நோக்கம் என்னவென்று தெரியலை. வெளிப்படைத்தன்மையில்லை. ஏதோ கோளாறு உள்ளது. என்ன காரணம் என்பதை அரசு விளக்க வேண்டும்.

    சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டது. போதை பொருட்கள் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால், போதைப் பொருளைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்கிறார் ஸ்டாலின். எங்கு கட்டுப்படுத்தினீர்கள்? டன் கணக்கில் பிடித்துக்கொண்டே இருக்கிறீர்கள். தினமும் கஞ்சா பறிமுதல் செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருவாகிவிட்டது.

    இன்றைக்கு, 'போதையின் பாதையில் செல்லாதீர்கள்' என்று முதல்வர் சொல்கிறார். நாங்கள் சொன்னபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. துணை முதல்வர் வேறு உறுதிமொழி எடுக்கிறாராம், எல்லாரும் கெட்டுப் போனபிறகு இப்படி பேசுகிறார்கள். போதை அடிமைகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது இதனை சரிசெய்துவிடுவோம். மக்களுக்கும், காவல்துறைக்கும் இங்கு பாதுகாப்பில்லை. போலீஸைப் பாதுகாக்கவே ராணுவம் கொண்டுவர வேண்டும் என்பது போன்று 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த அரசு செயலிழந்த அரசாக மாறிவிட்டது.

    இந்த பகுதியைச் சேர்ந்த பள்ளிக் கல்வி அமைச்சர் அண்மையில் சட்டமன்றத்தில் பேசுகிறார், எந்த விதிமுறையும் இல்லாமல் மேல்நிலைப்பள்ளி அதிகமாக அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டதாகச் சொல்கிறார், பள்ளி திறப்பது தப்பா? கல்வி கற்போர் எண்ணிக்கை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஆட்சியில் மக்களுக்காக அரசாங்கம்,. திமுக ஆட்சியில் அரசாங்கத்துக்காக மக்கள். இதுதான் திமுக, அதிமுகவுக்கான வேறுபாடு.

    திமுக என்றால் குடும்பக் கட்சி. தலைவர் முதல் அத்தனை பதவிகளிலும் குடும்பத்தினர் மட்டுமே வரமுடியும். கருணாநிதி தொடங்கி இன்பநிதி வரை திமுகவினர் ஏற்றுக்கொண்டுவிட்டனர். அப்படி அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த அமைச்சர்கள்தான் இவர்கள். கருணாநிதி குடும்பத்துக்கு எடுபிடியாகவே அமைச்சர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் திமுக குடும்பத்துக்காக உழைக்கிறார்கள். ஒரு வார்த்தை மறுத்துப் பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

    கருணாநிதி குடும்பத்தை எவராலும் எதிர்க்க முடியாது. திமுக கார்ப்பரேட் கம்பெனி. பிரதான பதவிகளை குடும்பத்தில் உள்ளவர்கள் பங்கு போட்டு பிரித்துக்கொண்டனர். அக்கட்சிக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டுவிட்டனர். அதிமுக ஜனநாயகம் உள்ள கட்சி, சாதாரண தொண்டர் கூட உயர்ந்த இடத்துக்கு வரலாம்.

    இங்கிருக்கும் அமைச்சர், துணை முதல்வருக்கு ரசிகர் மன்றம் வைத்திருக்கிறார், ரசிகர் மன்றத் தலைவராக இருக்கிறார். அமைச்சர் என்று வந்தபிறகு மக்களுக்காகத்தான் உழைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்பட வேண்டும்.

    இங்கு திருச்சி பெல் கம்பெனி, சிறுகுறு நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ளன. மின் கட்டணம் உயர்வால் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் கடுமையாகப் பாதித்தது, இதை பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாததுக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர்.

    இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. கடன் வாங்குவதில்தான் சூப்பர் முதல்வர் ஸ்டாலின். திமுக ஐந்தாண்டு முடியும் தருவாயில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இப்படி கடன் வாங்கியதில் தான் சாதனை படைத்தது திமுக அரசு.

    கடன் அதிகம் வாங்கும்போது வரி அதிகமாகும். வரி போட்டுத்தான் கடனை அடைக்க முடியும். 73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி. ஆனால் அதை விட திமுகவின் ஐந்தாண்டு கால கடன் சுமை அதிகம். நம் எல்லோரையும் ஸ்டாலின் கடனாளியாக்கிவிட்டார்.

    அரசு சார்பில் ஐந்தரை லட்சம் காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்று சொல்லிவிட்டு, வெறும் 50 ஆயிரம் பேர் தான் நிரப்பினாங்க. ஓய்வுபெற்றவங்க 75 ஆயிரம். அத்தனையும் பொய்தானே. ஏமாற்றிதானே வாக்குகளைப் பெற்றாங்க.

    இது, ஜல்லிக்கட்டுக்குப் பேர் பெற்ற பகுதி. இங்கு ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும், வீரர்களுக்குப் போதிய பாதுகாப்பு உதவிகள் செய்யப்படும்.

    சென்னையில் நேற்று பெய்த மழையால் மின்சார கேபிள் அறுந்து விழுந்ததில் கண்ணகி நகரில் வரலட்சுமி என்ற தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். இந்த அரசில் மின்சார வாரியம் சரியாகச் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதனால் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது.

    தஞ்சை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீத்தேனுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். அதிமுக ஆட்சி அமைந்ததும் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து நிலங்களைப் பாதுகாத்தோம். விவசாய நிலங்களைப் பறித்தது திமுக அரசு, அதனைப் பாதுகாத்தது அதிமுக அரசு. காவிரி நதிநீர் பிரச்னை 50 ஆண்டு காலம் தீர்க்கப்படவில்லை, அம்மா இருக்கும்போதே சட்டப்போராட்டம் நடத்தினார், அம்மா மறைவுக்குப் பிறகும் போராடி நல்ல தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது அதிமுக அரசு. 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமான காவிரியைக் காப்பாற்றியது அதிமுக அரசு. மக்களுக்குத் துன்பம் ஏற்படும்போது அதிலிருந்து பாதுகாத்தோம்.

    ஏழை, தாழ்த்தப்பட்டோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். திருமண உதவித் திட்டம் தொடரும், அதில் கூடுதலாக மணப்பெண்ணுக்கு பட்டுசேலை, மணமகனுக்கு பட்டு வேஷ்டி கொடுக்கப்படும். அடுத்தாண்டு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின்" என்று ஆரவாரத்துடன் பேசினார்.

    Next Story
    ×