என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் இன்று சேலம் வருகை
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் முதலமைச்சர் சிறப்புரையாற்றுகிறார்.
சேலம்:
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கில் நேற்று தொடங்கியது.
இதில் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.பி. டி.ராஜா, பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநாட்டின் 2-வது நாளான இன்று (16-ந் தேதி) வெல்க ஜனநாயகம் என்ற பெயரில் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை 6 மணியளவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.
அவருக்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ஆர்.ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி., மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி நெடுக மக்கள் வரவேற்புடன் சேலம் நேரு கலையரங்கம் வருகிறார். பின்னர் அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார். இதையொட்டி அவர் செல்லும் வழிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆகியோர் தலைமையில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இன்று முதலமைச்சருடன் கூட்டணி கட்சி தலைவர்களான காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, முஸ்லீம் லீக் காதர் மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், ஆதி தமிழர் பேரவை அதியமான் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
மாநாட்டில் நாளை (17-ந் தேதி) கம்யூனிஸ்டு கட்சி சார்ந்த நிகழ்வுகளும், 18-ந் தேதி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.






