என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

    • முதலமைச்சர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்கிறார்.
    • முதலமைச்சர் வருகையையொட்டி நெல்லை மாவட்ட தி.மு.க. வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20, 21-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வருகிற 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.

    தொடர்ந்து பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் மாலை 5 மணிக்கு தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து டக்கரம்மாள்புரம் தரிசன பூமிக்கு புறப்பட்டு செல்லும் முதலமைச்சர், அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்கிறார்.

    அங்கு விழா முடிந்ததும் வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறார்.

    தொடர்ந்து மறுநாள் (21-ந்தேதி) காலை 9.30 மணிக்கு நெல்லை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் ரூ.56½ கோடியில் கட்டப்படட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

    அங்கு சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும் அவர், ரூ.110 கோடியில் அமைக்கப்படும் காயிதே மில்லத் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    தொடர்ந்து பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கத்தை திறந்து வைக்கிறார். மேலும் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை சென்று விமானம் மூலம் சென்னை சென்றடைகிறார்.

    இந்த விழாவில் கனிமொழி எம்.பி., மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், மனோ தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அவர் பங்கேற்கும் அரசு விழாவிற்காக பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது மழைநீர் ஒழுகாத வகையில் மேற்கூரையுடன் கூடிய பந்தல் கிரேன் உதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் இந்த பந்தல் அமைக்கப்படுகிறது. இதில் தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

    முதலமைச்சர் வருகையையொட்டி நெல்லை மாவட்ட தி.மு.க. வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பல்நோக்கு மருத்துவமனை செல்லும் சாலையில் சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    முதலமைச்சர் வருகையால் மாநகர பகுதி சாலைகள் புதுப்பொலிவு அடைகிறது. கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளால் சேதம் அடைந்திருந்த சாலைகளை பழுது பார்க்கும் பணிகளும் இரவு பகலாக முழு வீச்சில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகள் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் ஆகியோர் பிரமாண்டமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×