என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    7 வயதிலேயே சிகரெட், குட்கா பழக்கத்துக்கு அடிமையாகும் சிறுவர்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    X

    7 வயதிலேயே சிகரெட், குட்கா பழக்கத்துக்கு அடிமையாகும் சிறுவர்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    • குறைந்தபட்சம் 100 சிகரெட் பிடித்த இளைஞர்கள் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புவதாகவும், ஆனால் விட முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
    • புகையிலை பழக்கம் கொண்டவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

    இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் புகைப்பழக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் ஆய்வு நடந்தப்பட்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    பள்ளிகள் இருக்கும் இடங்களில் 100 மீட்டர் தொலைவுக்குள் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை உள்ளது. மேலும் தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை உள்ளது.

    ஆனால் பல இடங்களில் பள்ளிகளின் அருகில் உள்ள கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குட்கா உள்ளிட்ட பொருட்களும் தடையின்றி கிடைக்கிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் 7 வயதிலேயே புகைப்பழக்கத்துக்கு அடிமையாவதாக ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளன.

    இந்தியாவில் 11.4 சதவீத சிறுவர்கள் தங்களின் 7 வயதிலேயே சிகரெட் பிடிக்க தொடங்குகிறார்கள். 17.2 சதவீதம் சிறுவர்கள் பீடி புகைக்கிறார்கள். 24 சதவீத சிறுவர்கள் 7 வயதிலேயே குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உட்கொள்கிறார்கள்.

    இந்தியாவில் 13 முதல் 15 வயதுக்கு உள்பட்ட 3.7 கோடி சிறுவர்கள் புகையிலை பயன்படுத்துகிறார்கள். தினமும் புகைபிடிக்கும் பெரியவர்களில் 87 சதவீதம் பேர் தங்களின் 18 வயதில் முதல் முறையாக புகைப்பழக்கத்தை தொடங்கியதாக தெரிவித்து உள்ளனர். 95 சதவீதம் பேர் தங்களின் 21 வயதில் புகைப்பழக்கத்தை தொடங்கியுள்ளனர். குறைந்தபட்சம் 100 சிகரெட் பிடித்த இளைஞர்கள் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புவதாகவும், ஆனால் விட முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

    சென்னையிலும் பள்ளிகளின் அருகில் பெரும்பாலான கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள 392 கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் 86 தொடக்கப்பள்ளிகளின் அருகில் 176 கடைகளிலும், 129 மேல்நிலைப்பள்ளிகளின் அருகில் 193 இடங்களிலும், 32 கல்லூரிகளின் அருகில் 67 கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன.

    புகையிலை பழக்கம் கொண்டவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை, 20 முதல் 39 வயதுக்குட்பட்ட ஆண்களில் 1 லட்சம் பேரில் 3.5 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 1 லட்சம் பேரில் 9.7 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே வயதுடைய பெண்களில், அதே காலகட்டத்தில் ஒரு லட்சத்திற்கு 0.8 ஆக இருந்த வாய் புற்றுநோய் பாதிப்பு 1.1 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் பள்ளிகளின் அருகில் உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பல்பொருள் அங்காடிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சில இடங்களில் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் சிகரெட் விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×